Thursday, March 3, 2016

தாமிரபரணி!

தாமிரபரணி!


மேற்குத்தொடர்ச்சி மலை! அதில் ஒரு பகுதியாகிய 5500அடிக்கும் அதிகமான உயரத்திலுள்ள  பொதிகைமலை! கூம்பு வடிவமுள்ள அழகிய சிகரம்! இந்த மலைப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனமாகும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கும் திக்கெல்லாம் பச்சைப்பட்டு விரித்ததைப்போல் பசுமையான மரங்கள், செடி,கொடிகள், புதர்கள், புல்வெளிகள், அரியவகை மூலிகைகள், என பரந்து விரிந்து காணப்படுகிறது. இவ்வனம், குளிர்ந்த தென்றல் காற்று, ஆண்டு முழுவதும் கொட்டும் அருவிகள், நீரோடைகள், ஆறுகள், என எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்!
இங்குதான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிய "களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்' அமைந்துள்ளது. இக்காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி "பூங்குளம்'. இது இயற்கையான செவ்வக வடிவக் குளமாகும். இந்தக் குளம்தான் தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தலம் என்று தமிழ்க வனத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நதியின் நீளம் 120கி.மீ. இதில் 23கி.மீ மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே சமதளத்தில் இதன் ஓட்டம் 97கி.மீ மட்டுமே! தென்மேற்கு பருவ மழை, வடகிழக்குப் பருவ மழை, என இரு மழைக்காலங்களிலும், இப்பகுதியில் மழை இருப்பதால் இது வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது.

வனப்பகுதிகளில் தாமிரபரணி
 
பொதிகை மலையின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பெருகிவரும் பேயாறு, சிற்றாறு அல்லது சித்ராநதி, காரையாறு, மயிலாறு, பாம்பாறு, சேர்வலாறு, என ஏழு காட்டாறுகள் துணை ஆறுகளாக தாமிரபரணியுடன் வனப்பகுதிக்குள்ளேயே சேர்கின்றன.
 மலைச்சரிவுகளில் அடர்ந்த வனத்தினூடே பாய்ந்தோடி வரும் தாமிரபரணி, பாறைகளுக்கிடையே துள்ளிக் குதித்து "பாண தீர்த்த அருவி'யாக கீழே இறங்கி ஓடி வரும் பாதையில்தான் "சொரிமுத்து ஐயனார் கோயில்' அமைந்துள்ளது. இதனையடுத்து கல்யாணதீர்த்த அருவியாக மீண்டும் கீழிறங்கும் இடத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது. அடுத்து அகஸ்தியர் அருவியாக மலையினை விட்டு கீழிறங்கி விடுகிறாள் நதி அன்னை!
 இப்பகுதியில் உள்ள "தலையணை' என்ற தடுப்பணையைத் தாண்டி சிவஸ்தலமாகிய பாபநாசம் வந்து சேர்கிறாள். இங்கிருந்து சமவெளிப் பயணம் தொடங்குகிறது.

சமவெளிப் பயணம்
சொரிமுத்து அய்யனார் கோவில்
 
 பூங்குளத்தில் பொங்கிப் பெருகி பாய்ந்தோடி வரும் தாமிரபரணி, பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திருநெல்வேலி வழியாக திருநெல்வேலி மாவட்டத்தைக் கடந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் வழியாக புன்னக்காயல் என்னுமிடத்தில் மன்னார் வளைகுடாவில் கடலுடன் கலக்கிறாள்!
 சமவெளிப் பகுதியில் மணிமுத்தாறு, கடனா நதி, ராமநதி, பச்சையாறு, சிற்றாறு, என்னும் ஐந்து துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன.

அணைகள்
 
 தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளில் பாபநாசம் மேலணை, பாபநாசம் கீழணை, சேர்வலாறு அணை, ராமநதி அணை, மணிமுத்தாறு அணை, கடனா நதி அணை, என பல அணைகள் கட்டப்பட்டுள்ளன.

தடுப்பணைகளும் வாய்க்கால்களும்
 
 தாமிரபரணியில் பெருகி வரும் நீர், எட்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு கால்வாய்கள் மூலம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
 மன்னர்கள் காலத்திலேயே தலையணை, நதியுண்ணி, கன்னடியன், அரியநாயகிபுரம், பழவூர், சுத்தமல்லி, மருதூர் முதலிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
 தடுப்பணைகளில் தடுத்து நிறுத்தப்படும் நீரை, மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக பாளையங்கால்வாய்(42.6கி.மீ நீளம்),  திருநெல்வேலி கால்வாய் (28.6கி.மீ.), கோடகன் கால்வாய் (27.5கி.மீ) உள்ளிட்ட 11கால்வாய்கள் உள்ளன.
 இந்த கால்வாய்கள் மூலம் செல்லும் நீரானது சுமார் 1300குளங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் விவசாயம் செழிப்படைவதுடன், இரு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடுவதால் மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியடைகிறது.
 ஆற்றின் பல பகுதிகளிலும் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு நீர் எடுத்து குடிநீராக பயன்படுத்தப் படுகிறது. இதனால் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தியடைகிறது.

சங்குமுகம்
ஸ்ரீவைகுண்டம் அணை
 
 சங்குமுகம் என்பது புன்னைக்காயல் ஒட்டிய கடல் பகுதிக்குள் உள்ளது. இதற்கு 4கி.மீ. கடலிற்குள் படகில் செல்ல வேண்டும். இங்குதான் தாமிரபரணி கடலுடன் சங்கமிக்கும் அழகினைக் காணமுடியும். இந்த இடம் "மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பகத்தின்' கட்டுப்பாட்டில் இருக்கிறது.
 தாமிரபரணியின் கழிமுகப்பகுதி அலையாத்திக் காடுகள், கடல் பறவைகள், துள்ளிக் குதிக்கும் மீன்கள் என திகட்டா அழகுடன் விளங்குகிறது. இங்கு நன்னீரும் கடல் நீரும் கலக்குமிடம், நீலநிற கடலில் பச்சை நிறத்தில், சற்று நிறம் மாறி வித்தியாசமாக தெரியும். நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது வேகமாக பெருகி வரும் நீரானது கடலைக் கிழித்துக் கொண்டு நீண்ட தூரம் தனி நீரோட்டமாகச் செல்லும்!

செழிப்பு!
காரையாறு அணை
 
 தென் மாவட்டங்களை மிகவும் வளமாக்கும் நதி தாமிரபரணியே! இந்த ஜீவநதியன்னை 86,107 ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கி இம்மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாயென காத்து வருகிறாள். நெல், வாழை உள்ளிட்ட பல பயிர்வகைகளும் செழிப்பாக விளைகின்றன. பயன் தரும் மூலிகைகளும், மரங்களும், இங்கு செழித்து வளர்கின்றன. நதியன்னையும், இயற்கையன்னையும் கைகோர்த்துக்கொண்டு எப்போதும் மலர்ச்சியாக இருப்பதைக் எல்லாக் காலங்களிலும் இங்கு காணலாம். 

சிறப்பு!
தலையணை
 
சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் கயிலாயத்தில் ஒன்றுகூடியதால், உலகின் சமநிலை பாதிக்கப்பட்டது. அதனை சரி செய்ய அகஸ்தியர் தென்முனை வந்தபோது, இறைவனிடம் தாமிரத்தால் ஆன மலர்மாலையைப் பெற்று வந்தார். அது பரணி நட்சத்திர நாளில் பெண்ணாக மாறி தாமிரபரணி எனப் பெயர் பெற்றது. அப்பெண் வைகாசி விசாகத்தன்று நீராக மாறி நதியாகப் பெருக்கெடுத்து பூமியை செழிக்கச் செய்து கடலில் சங்கமித்ததாக இந்து புராணங்கள் கூறுகின்றன. இன்றும் வைகாசி விசாக நட்சத்திர நாளில் "தாமிரபரணி புஷ்கரம்' என்ற விழா கொண்டாடி நதியை வணங்குகிறார்கள்.
 வியாசரின் மஹாபாரதத்திலும், வால்மீகியின் ராமாயணத்திலும், காளிதாசரின் ரகுவம்சத்திலும் இந்நதி பற்றிய குறிப்புகள் உள்ளது.
 மேலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி, இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், சேக்கிழாரின் பெரியபுராணம், கம்பரின் கம்பராமாயணம் என பல சங்க இலக்கிய நூல்களில் இந்நதி பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதன் புகழ் பாடும் வடமொழி நூல் "தாமிரபரணி மஹாத்மியம்' ஆகும்.
வரலாற்றுப் பெருமைகள்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்திய சிறப்பு வாய்ந்த நல்ல பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்த மக்களை கொண்ட "ஆதிச்சநல்லூர் நாகரிகம்' இந்நதிக்கரையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வளம் பெற தொடங்கியிருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். 8000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 மேலும் பிற்கால பாண்டியர்களின் தலைநகராகிய கொற்கை இந்நதிக்கரையில் இருந்துள்ளது. இந்நகருக்கு வெளிநாட்டவர் வந்து சென்றதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. பெரும் வணிகதளமாக இந்நகர் இருந்து உள்ளது.
கரையெல்லாம் ஆலயங்கள்! பாணதீர்த்தம் முதல் புன்னைக்காயல் வரை கரை பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக பல ஆலயங்கள் உள்ளன. இவற்றில் மிகப் புகழ் பெற்ற ஆலயங்களும் உண்டு! அகஸ்தியரின் சீடர் தாமிரபரணி கரையில் 9இடங்களில் 9கிரகங்களுக்கும் 9 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு இறுதியில் சங்குமுகத்தில் நீராடி இறைவனை அடைந்தார். பிற்காலத்தில் 9 லிங்கங்கள் இருந்த இடத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டு நவகயிலாயம் என புகழ்பெற்று விளங்குகின்றன.  

மண்டபங்களும் படித்துறைகளும்!தாமிரபரணி கரையெல்லாம் பல்வேறு மன்னர்களால் சிறிதும் பெரிதுமாகக் கட்டப்பட்ட நூற்றுக் கணக்கான மண்டபங்களும், படித்துறைகளும் பல் வேறு அழகிய அமைப்புகளுடன் அமைந்துள்ளன.
 இவ்வாறு புனிதத் தன்மைகளுடனும், பெருமைகளுடனும், சிறப்புகளுடனும் திகழ்கிறது தாமிரபரணி!
இவ்வாறு மக்களின் வாழ்வை வளப்படுத்தும் தாமிரபரணி, தற்போது மக்களின் அறியாமை, பொறுப்பின்மை, அலட்சியம் போன்றவற்றால் பொலிவிழந்துள்ளது. வனப்பகுதியில் மரங்கள் அதிகம் வெட்டப்படுவதால் ஆற்றில் நீர் வளமும் குறைந்து விட்டது. மரத்தினை தாங்கிநிற்கும் வேரினைப்போல் பூமியில் உயிர்களை தாங்கி நிற்கும் நதிகளை அனைவரும் ஒன்றிணைந்து காக்க உறுதி ஏற்போம்!
(Dinamani)

No comments:

Post a Comment